உலகம்

பெண் பத்திரிகையாளரின் பாலியல் குற்றச்சாட்டை மறுத்த இங்கிலாந்து பிரதமர்

செய்திப்பிரிவு

தன் மீதான பெண் பத்திரிகையாளரின் பாலியல் குற்றச்சாட்டை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

போரிஸ் ஜான்ஸன் 20 வருடங்களுக்கு முன்னர் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆசிரியாக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் தகாத செயல்களில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் சார்லெட் எட்வர்ட்ஸ் குற்றம் சாட்டினார்.

இந்தச் சம்பவம் 1999 - 2000 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் நடந்ததாகவும் அப்போது தனக்கு 20 வயது இருக்கும் என்று எட்வர்ட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்ஸனின் செய்தித் தொடர்பாளர், ”இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைத் தன்மையற்றது” என்று தெரிவித்தார்.

தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

பிரெக்ஸிட்டை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருந்து வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தை அக்டோபர் 14 ஆம் தேதி வரை முடக்கி உள்ளார்.

இந்த நிலையில் போரிஸ் ஜான்ஸன் மீது வரிசையாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

SCROLL FOR NEXT