ஹாங்காங்கில் சீன தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
70 ஆண்டுகளுக்கு முன்னால், 1949-ல் மா சே துங் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை நிறுவினார். இன்றும் சீனா உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது. வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல், விளையாட்டுத் துறை என பலவற்றில் உலக நாடுகள் பிறவற்றுக்குச் சவால் விடும் நிலையில் சீனா முன்னேறி வருகிறது.
சீனாவில் 70 -வது தேசிய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது.
தேசிய தினத்தையொட்டி பெய்ஜிங்கின் புகழ்பெற்ற தியானன்மென் சதுக்கத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்ற இருக்கிறார்.
இந்நிலையில் சீன தேசிய தினம், ஹாங்காங்கில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ராணுவ அணிவகுப்பு நடந்து முடிந்தவுடன் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
எனினும் கருப்பு உடை அணிந்த போராட்டக்காரர்கள் பெரும் திரளாக கையில் கருப்புக் குடையுடன், சீனாவுக்கு எதிராகப் பதாகைகளுடன் பேரணியாகச் சென்று சீன தேசிய தினத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஹாங்காங் போராட்டம்
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.
எனினும் கடந்த 4 மாதங்களாக போராட்டக்காரர்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றக் கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.