உலகம்

சோமாலியாவில் அமெரிக்க ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல்

செய்திப்பிரிவு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்க ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”சோமாலியாவில் பாலிடோங்லே நகரில் அமைந்துள்ள அமெரிக்க முகாம்கள் மற்றும் ஐரோப்பிய ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தினர். அதன் பின்னர் அப்பகுதியில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் அமெரிக்க ராணுவ முகாம் பலத்த சேதம் அடைந்தது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்தத் தாக்குதலுக்கு சோமாலியாவின் தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கப் படைகள் நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதலில் அல் ஷபாப் தீவிரவாதிகள் 10 பேர் பலியாகினர் என்றும் தீவிரவாதிகளின் வாகனங்களும் சேதமடைந்தன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சோமாலிய அரசுக்கு எதிராக அல் கொய்தாவுடன் இணைந்து அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் ராணுவ சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் சமீபகாலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அல் ஷபாப் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் அங்கு முகாம் அமைத்துத் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT