சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஊடகங்கள், “சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்ஹைய் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 8 பேர் மீட்கப்பட்டனர். மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களால் தீ போராடி அணைக்கப்பட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தொழிற்சாலை விபத்தாக இது கருதப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 78 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் நடந்த தொழிற்சாலை விபத்தில் 15 பேர் பலியாகினர்.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தொழிற்சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அங்கீகாரம் பெறாத தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்குவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருவதாக சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.