பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : படம் உதவி ட்விட்டர் 
உலகம்

மக்களோடு மக்களாக சாதாரண விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்ட இம்ரான் கான் 

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்


ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சவுதி அரேபிய அரசு வழங்கிய தனிவிமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், வேறு வழியின்றி மக்கள் பயணிக்கும் சாதாரண விமானத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா புறப்பட்டார்.

ஐ.நா.பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சவுதி அரேபியா சென்றனர். அந்நாட்டு அரசு இவர்கள் பயணிக்க சிறப்பு விமானம் வழங்கி உதவியது.

ஐ.நா.பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று நியூயார்க் நகரில் இருந்து மீண்டும் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அதிகாரிகள் தனி விமானத்தில் புறப்பட்டனர். ஆனால், விமானம் நடுவழியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் விமானம் நியூயார்க் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.

அதன்பின் நியூயார்க்கில் உள்ள ஜான் கென்னடி விமானநிலையத்தில் தரையிறங்கி சிறப்பு விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனிடையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரின் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் தங்கி இருந்தனர்.

நீண்டநேரம்ஆகியும் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து, நியூயார்க்கில் இருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நகர் செல்லும் சாதாரண விமானத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து, இம்ரான் கான், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமது குரேஷி, வெளியுறவத்துறை செயலாளர் சோஹைல் மெகமது உள்ளிட்ட அதிகாரிகள் சாதாரண விமானத்தில் ரியாத் நகர் புறப்பட்டனர்.

ரியாத்தில் இருந்து மற்றொரு விமானம் மூலம் இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் பாகிஸ்தான் சென்றடைவார்கள்.


ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT