லிஸ்பன்
மேற்கு ஆப்பிரிக்கத் தீவொன்றின் கடற்கரையில், சுமார் 200 டால்பின்கள் இறந்து, கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ''போன் விஸ்டா என்னும் தீவின் கடற்கரையில் இருந்து சுமார் 200 டால்பின்கள் இறந்த பின்னர், கரையில் ஒதுங்கின. பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அவற்றில் சிலவற்றை எடுத்து மீண்டும் கடலுக்குள் போட்டனர். எனினும் அவை மீண்டும் கடற்கரைக்குத் திரும்பின.
உயிரிழந்த 136 டால்பின்கள், புல்டோசர்கள் மூலம் புதைக்கப்பட்டன. 50 டால்பின்களில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 டால்பின்களும் உச்சபட்ச உறை நிலையில் பதப்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின், லாஸ் பாமாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து நிபுணர்கள் வந்தபிறகு, சோதனைகள் மேற்கொள்ளப்படும். அவற்றின் முடிவுகளில் இருந்து டால்பின்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும்'' என்று கூறப்பட்டுள்ளது.
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள், கால நிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளால், கடல்வாழ் உயிரிகள் உயிரிழந்து வருவதாக, சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
ஏபி