அமெரிக்க தடையையும் மீறி ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை துருக்கி தொடர்ந்து வாங்கும் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ” ஈரானுடன் உறவை முறித்து கொள்வது என்பது எங்களால் முடியாத ஒன்று. ஈரானிடமிருந்து தொடர்ச்சியாக நாங்கள் கச்சா எண்ணெய்யை வாங்குவோம்” என்று தெரிவித்தார்.
எனினும் அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவனங்கள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அஞ்சுவதாகவும் எர்டோகன் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் அச்சுறுத்தலை மீறியும் துருக்கி தொடர்ந்து ஈரானுக்கு தனது ஆதரவை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
மேலும் சமீபத்தில் சவுதி எண்ணெய் ஆலை கப்பல் தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்துகுற்றம் சாட்டி இருப்பது அமெரிக்கா - ஈரான் இடையே மோதலை அதிகரித்துள்ளது.