நியூயார்க்
காஷ்மீர் முஸ்லிம்களின் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாக பற்றி மட்டும் கவலைப்படும் பாகிஸ்தான் ஏன் சீனா முழுவதும் முஸ்லிம்கள் நிலை பரிதாபமாக இருக்கிறதே அது குறித்துப் பேசவில்லை என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது
நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுக்குழுவின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் இன்று பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பேசஉள்ளனர்.
இதற்கிடையே ஐ.நா.வில் தெற்கு மற்றும் மத்தியஆசியாவுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளர் ஆலிஸ் வெல் பேசினார். அப்போது அவர் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும், காஷ்மீர் மீது மட்டும் அதிக அக்கறை கொள்வதுகுறிததும் கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், " பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனாவுக்கு எதிராக ஏதும் பேசுவதில்லை. சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாநிலத்தில் துருக்கி பேசும் முஸ்லிம்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள் அடிப்படை உரிமைகளை இழந்து, காவலில் வைக்கப்பட்டு மோசமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.
சீனா எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இருக்கிறது. பாகிஸ்தானைக் பூர்வீகமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது, அதன் தலைவர் மசூத் அசார், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கியக் காரணமாக இருந்த ஹபிஸ் சயத் ஆகியோர் மீது சர்வதேச தடை விதிக்கும் போதெல்லாம் சீனா ஓடிவந்து சர்வதேச நாடுகளின் முயற்சியைத் தடுத்து, அவர்களைக் காத்தது.
ஆலிஸ் வெல்ஸ் : படம் உதவி ட்விட்டர்
பாகிஸ்தான் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து மீண்டுவருவதற்கும் சீனாதான் உதவி செய்து வருகிறது.
ஆனால், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் மீது காட்டப்படும் பரிவு, இரக்கம், மனித உரிமைகள் மீறப்படுவதாக ஆதங்கம் ஆகியவை சீனாவின் மேற்கு பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் மீது பாகிஸ்தான் ஏன் இரக்கம் கொள்வதில்லை. அவர்களை ஏன் கவனிப்பதில்லை.
காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் அனுபவிக்கும் மனித உரிமை மறீல்களைக் காட்டிலும் பன்மடங்கு சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள். சீனாவில் உள்ள முஸ்லிம்கள் நிலை,அவர்களின் பரிதாபமான நிலைகுறித்தும் இந்த சபை தொடர்ந்து வெளிச்சத்துக்கு கொண்டுவரும் " எனத் தெரிவித்தார்.
பிடிஐ