நியூயார்க்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 74-வது ஆண்டு கூட்டத்தில் இன்று பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச உள்ளனர். இருவரின் பேச்சைக் கேட உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
இந்தியப் பிரதமர் மோடியைப் பொறுத்தவரை வளர்ச்சி, அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தனது பேச்சில் குறிப்பிடுவார் எனத் தெரிகிறது.
அதேசமயம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது பேச்சில் முழுக்க காஷ்மீர் விவகாரத்துக்கு முக்கியத்துவம அளித்து பேசக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. பொதுச்சபையில் 74-வது ஆண்டு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நியூயார்க் சென்றார். கடந்த 22-ம் தேதியில் இருந்து ஐ.நா.வில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார்.
ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப்புடன் பங்கேற்ற பிரதமர் மோடி, அதன்பின் நியூயார்க் வந்து பருவநிலை உச்ச மாநாடு, பசிபிக் தீவுகள் நாடுகள் மாநாடு, தீவிரவாத ஒழிப்பு குறித்த வட்டமேசை மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் இடையே அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு மேல் பிரதமர் மோடி ஐ.நா.வில் உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச உள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசும் உரையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், காஷ்மீர் விவகாரம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று சர்வதேச சமூகத்துக்கு ஏற்கெனவே இந்திய அரசு பலமுறை அறிவித்துவிட்டதால், காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சு இடம் பெற வாய்ப்பில்லை.
இதுகுறித்து ஐ.நாவில் இந்தியாவுக்கான நிரந்திர பிரதிநிதி சயத் அக்பரூதீன் இதை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளிட்ட அறிவிக்கையில், " சர்வதேச சமூகத்தின் முன் ஏராளமான சவால்கள் இருக்கின்றன, இன்னும் உலகப் பொருளாதாரம் உறைந்து இருக்கிறது, உலகின் பல்வேறு இடங்களில் பதற்றமும், வன்முறையும் நிகழ்கின்றன, தீவிரவாதம் பரவி வளர்ந்து வருகிறது, காலநிலை மாற்றம், ஏழ்மையை ஒழிப்பு ஆகியவை இருக்கின்றன.
ஆதலால், உலகச் சமுதாயம் இந்த சவால்களை எதிர்கொண்டு தீர்வுகான பரஸ்பர செயல்பாடு அவசியம். உங்களின் ஆதரவு இதற்கு மிகவும் அவசியம், இந்தியா தனதுபங்களிப்பை செய்யும்" எனத் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, 370 பிரிவை திரும்பப் பெற்றது போன்ற இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று பேசி வருகிறது, ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவு குரல்கள் இல்லை. இருப்பினும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தூதரக உறவு, வர்த்தக உறவு, வான்வழிப்பாதையில் இடையூறு போன்றவற்றை பாகிஸ்தான் அரசு செய்தது.
இறுதியாக ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்திலும் எழுப்புவோம் எனத் தெரிவித்திருந்தது. அந்த வகையில் ஐ.நா.வில் இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேச்சில் காஷ்மீர் முக்கிய விவகாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா.வில் நடந்த வெறுப்புணர்வு பேச்சு வட்டமேசை கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகனும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி 80 லட்சம் மக்கள் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள் என்று பேசி இருந்தார். அப்போது பேசிய இம்ரான் கான் இந்தியஅரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
57 உறுப்பினர்கள் கொண்ட முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை திரும்பப் பெற்று ரத்து செய்த சிறப்பு அந்தஸ்தை திரும்ப வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத்தயார் என்று பேசிவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது உரையில் காஷ்மீர் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், பிரதமர் மோடியுடான சந்திப்பின்போது, பாகிஸ்தானுடன் இந்தியா தனது உறவை மேம்படுத்த வேண்டும், காஷ்மீர் மக்கள் சிறந்த வாழ்வைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆதலால் இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் என்ன பேசப்போகிறார்கள் என்பது உலகநாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஐஏஎன்எஸ்