ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனே, (அடுத்த படம்) மெகுல் சோக்சி. 
உலகம்

மெகுல் சோக்சி மேல்முறையீடுகள் ரத்தானால் இந்தியாவிடம் அவரை ஒப்படைக்கிறோம்: ஆன்டிகுவா பிரதமர் உறுதி

செய்திப்பிரிவு

நியூயார்க்,

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து ஆன்டிகுவாவுக்குத் தப்பிச் சென்ற மெகுல் சோக்சியின் மேல்முறையீடுகள் ரத்தான பிறகுதான் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கமுடியும் என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவர் மீதும், சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளன. ஆனால் அதற்கு முன்னதாகவே மெகுல் சோக்ஸி ஆன்டிகுவாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சிக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்தது.

நீரவ் மோடி சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆன்டிகுவா குடியுரிமை பெற்றுள்ள சோக்சி, அங்கேயே வசித்து வருகிறார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுனே இந்தியாவின் டிடி தொலைக்காட்சி செய்தி ஊடகத்திடம் கூறியதாவது:

"எங்கள் நாடு சட்டங்களின் நாடு, அவரது பிரச்சினை தற்போது எங்கள் நாட்டின் நீதித்துறை முன் உள்ளது. அதனால் நாங்கள் தனியே எந்த முடிவையும் எடுக்கமுடியாத நிலையில் உள்ளோம். அவர் (சோக்ஸி) பல மேல் முறையீடுகளை செய்துள்ளார்.

அவரது முறையீடுகள் ரத்தாகும்வரையில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அவரால் எங்கள் நாட்டுக்கு எந்தப் பெருமையும் இல்லை. நன்மையும் இல்லை. ஆன்டிகுவா பார்புடாவுக்கு அவர் எந்த மதிப்பும் கொண்டு வரவில்லை.

இவ்வாறு ஆன்டிகுவா பிரதமர் தெரிவித்தார்.

- ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT