ஜகார்தா,
இந்தோனேசியத் தீவுகளில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
கிழக்கு இந்தோனேசியாவின் தொலைதூர மாலுகு தீவுகளில் உள்ள மாலுகு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மாலுகு மாகாணத்தைச் சேர்ந்த அம்போனுக்கு வடகிழக்கில் 37 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:46 மணிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியிவின் இந்த மாலுகு தீவில் கடந்த காலங்களைப் பொறுத்தவரை பலத்த நிலநடுக்கங்கள் இப்பகுதியை உலுக்கியுள்ளது. எனினும் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் இதுவரை இல்லை.
அங்கு வசித்துவரும் ஏஎப்பி செய்தியாளர் இதுகுறித்து தெரிவிக்கும்போது, "நான் என் குடும்பத்தினருடன் தூங்கிக் கொடிருந்தபோது திடீரென்று வீடு நடுங்கத் தொடங்கியது. இந்த நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது. நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து ஓடிச் சென்றோம், அண்டை வீட்டாரும் தப்பி ஓடுவதைக் கண்டோம். அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் பீதியடைந்தனர்" என்றார்.
கடலுக்கடியில் பூமியின் ஆழத்தில் உள்ள டெக்டோனிக் தகடுகள் மோதுகின்ற இந்த பசிபிக் பகுதி ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் நெருப்பு வளையத்தில் உள்ளது. அதன் நிலை காரணமாக இந்தோனேசியா அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலைச் செயல்பாடுகளைப் பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு, சுலவேசி தீவில் உள்ள பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஏற்பட்ட சுனாமியால் 4,300 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
டிசம்பர் 26, 2004 அன்று, சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் சுனாமியைத் தூண்டியது. இந்தோனேசியாவில் சுமார் 1,70,000 பேர் உட்பட இப்பகுதி முழுவதும் 2,20,000 பேர் கொல்லப்பட்டனர்.