உலகம்

போரினால் பாதிக்கப்பட்ட ஏமனில் 3.7 மில்லியன் குழந்தைகளின் கல்வி ஆபத்தில் உள்ளது: யுனிசெஃப்

செய்திப்பிரிவு

சனா

போரினால் பாதிக்கப்பட்ட ஏமனில் இரண்டு மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு வெளியே உள்ளதாகவும் மோதல் அதிகமான நிலையில் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவைக் கைப்பற்றிய பின்னர், சவுதி அரேபியாவும் அதன் கூட்டாளிகளும் இணைந்து மார்ச் 2015-ல் தலையிட்ட அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சண்டை மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரவைத்துள்ளது. 24.1 மில்லியன் மக்களுக்கு (மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்களுக்கு) உதவி தேவைப்படுகிறது. யுனிசெஃப்பின் கூற்றுப்படி, ஐந்து வயதிற்குட்பட்ட 1.8 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏமனைச் சூழ்ந்துள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது. போர்ச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''ஏமன் நாட்டில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர்களின் சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியர்களின் வருகையும் குறைந்துவிட்டது. மேலும் 3.7 மில்லியன் குழந்தைகளின் கல்வி ஆபத்தில் உள்ளது.

ஏமனில் உருவாகியுள்ள வன்முறைகள், இடம்பெயர்தல் மற்றும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் பல குழந்தைகளை பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றன.

ஏமனில் ஏற்கெனவே கல்வியின் நிலை மிகவும் பலவீனமானது. மோதலினால் ஏற்பட்ட பேரழிவுகள் அங்குள்ள கல்வி முறையை மேலும் நாசம் செய்துவிட்டது. மோதலின் நேரடி விளைவாக நாட்டின் ஐந்து பள்ளிகளில் ஒன்றை இனி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளியிலிருந்து வெளியேறும் குழந்தைகள் போரில் சேர்ந்துவிடுகிறார்கள் அல்லது குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர். அனைத்துச் சுரண்டல்களின் அபாயங்களையும் ஏமன் நாட்டுக் குழந்தைகள் எதிர்கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் அக்கறையுள்ள சூழலில் அவர்கள் வளர்ந்தாலும் போகப்போக வாய்ப்புகளை அவர்கள் இழக்கிறார்கள், இறுதியில் வறுமை மற்றும் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறார்கள்''.

இவ்வாறு யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

-பிடிஐ

          
SCROLL FOR NEXT