அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம் 
உலகம்

தீவிரவாதத்தை மதத்தோடு இணைத்து பேசிய அதிபர் ட்ரம்ப்புக்கு இம்ரான் கான் கட்சியின் எம்.பி. கண்டனம் 

செய்திப்பிரிவு

லாகூர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தீவிரவாதத்தை மதத்தோடு இணைத்துப் பேசியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கண்டனம் தெரிவித்து, பேசிய வார்த்தையை திரும்பப் பெறுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

ஹூஸ்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பேசுகையில், "மக்களை இஸ்லாமியத் தீவிரவாதத்திடம் இருந்து காக்கவும், எல்லையைக் காக்கவும் இந்தியாவும், அமெரிக்காவும் ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன" என்று பேசியிருந்தார்.

இதில் தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்தோடு இணைத்துப் பேசியதற்கு பாகிஸ்தானின் இம்ரான் கான் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியின் இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி. ரமேஷ் குமார் வங்வானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எம்.பி. ரமேஷ் குமார் : படம் உதவி ட்விட்டர்

தீவிரவாதத்துக்கு மதம் இல்லாத நிலையில் மதத்தோடு இணைத்து அதிபர் ட்ரம்ப் பேசியது தவறு. அந்த வார்த்தையைத் திரும்பப் பெற எம்.பி. ரமேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மதத்தோடு தீவிரவாதத்தை இணைத்துப் பேசியது ஒற்றுமையின் மீதும், மனிதநேயத்தின் மீதும், அனைத்து மதங்கள் மீதும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கும் மனிதநேயம் கொண்டவர்களை வேதனைப்படுத்துகிறது.

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை. ஆனால், தீவிரவாதத்தை மதத்தோடு இணைத்து அதிபர் ட்ரம்ப் பேசியது மிகவும் வருத்தத்திற்குரியது.

அதிபர் ட்ரம்ப் பேசிய விவரம் நாளேடுகளில் வந்தது கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்தோடு இணைத்துப் பேசியதால் கண்டனம் தெரிவித்து இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன்.

ட்ரம்ப் பேசிய வார்த்தைகள் உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் பாதித்துள்ளது. அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களின் உணர்வுகளையும் ட்ரம்ப் வார்த்தை காயப்படுத்தியுள்ளது.

இஸ்லாம் மட்டுமல்ல, கிறிஸ்தவம், இந்து மதம், யூத மதம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டியதுதான். இவ்வாறு அப்பாவி மக்களைக் கொல்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

பாகிஸ்தான் குடிமகனாக, உங்களின் வார்த்தை என்னை மட்டுமல்ல, பாகிஸ்தானில் வசிக்கும் அனைத்து மக்களின் மனதையும் காயப்படுத்தியுள்ளது. ஆதலால், நீ்ங்கள் பேசிய வார்த்தைகளை தயவுசெய்து திரும்பப் பெற்றுக்கொண்டு, உலகில் நிலவும் அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்து வைக்கும்போது நடுநிலைமையுடன், பாரபட்சமின்றிச் செயல்படுங்கள் எனறு கோரிக்கை வைக்கிறேன்.

இல்லாவிட்டால் உங்களின் வார்த்தைகள் ஏற்கெனவே கோபத்துடன் இருக்கும் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை மேலும் கோபப்படுத்தி, இன்னும் அவர்கள் வெறுப்புடன் அப்பாவி மக்களுக்கு எதிராக திரும்பக் கூடும்''.

இவ்வாறு ரமேஷ் குமார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்

பிடிஐ

SCROLL FOR NEXT