இலங்கை
சமூக வலைதளத்தில் பலரும் நேசித்த இலங்கையின் 70 வயதுப் பெண் யானை டிக்கிரி வயோதிகம் காரணமாக நேற்று மாலை உயிரிழந்தது. இது உலகெங்கும் டிக்கிரியை நேசித்தவர்களை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியது.
எலும்பும் தோலுமாக மெலிந்து காணப்பட்ட 70 வயது டிக்கிரி யானை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கவலையுடன் பதிவிட்டுக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் யானை டிக்கிரி நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
யானை என்றாலே கம்பீரமான அதன் பெரிய தோற்றம்தான் அனைவரின் நினைவுக்கு வரும். கடந்த சில மாதங்களுக்கு முன் எலும்பும் தோலுமாக இதுவரை அப்படி ஒரு தோற்றத்தில் யாரும் பார்த்திராத ஒரு யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இலங்கையில் பெளத்த திருவிழாவில் பங்கேற்ற 70 வயதுப் பெண் யானையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மொத்த உலகத்தையும் அதிரவைத்தது.
யானைகளைப் பாதுகாப்போம் - ‘சேவ் எலிபேண்ட் ஃபௌண்டேஷன்’ (Save Elephant foundation ) என்ற அறக்கட்டளை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் யானையின் மெலிந்த எலும்பும் தோலுமான புகைப்படத்தை வெளியிட்டது. அதைப் பார்த்தவர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த யானையின் பெயர் டிக்கிரி. அது ஒரு பெண் யானை. அதன் வயது 70.
டிக்கிரி யானை குறித்து சேவ் எலிபேண்ட் என்கிற அமைப்பு அதன் முகநூல் பக்கத்தில் செய்த பதிவு:
“இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டுதோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்ளும். அதில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று.
அதற்கு உடல்நிலை சரியில்லை. திருவிழா தொடங்கும்போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும் தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
டிக்கிரி தினமும் பல கிலோ மீட்டருக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிட்டனர். அதன் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை.
டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசீர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்க முடியும் என இணைய வாசிகளும், விலங்குகள் நல ஆர்வலர்களும் கூறினர். விழா என்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்று. ஆனால் அது பிறருக்கு எந்தக் கஷ்டத்தையும் அளிக்காமல் இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டனர்.
இதைப் பார்த்த பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். ஆனால் யானையின் உரிமையாளர் அதை மறுத்திருந்தார். யானையை விழாவில் பங்கேற்க அழைத்து வரவில்லை. வேண்டுதலை நிறைவேற்றத்தான் அழைத்து வந்தோம் என்று தெரிவித்தார். இந்தப் பதிவு வெளியான இரண்டு நாட்களில் டிக்கிரி உடல் சோர்வால் கீழே விழுந்து மயக்கமானது. அதற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கண்டி தலதா மாளிகை உற்சவத்தின் போது, பலரின் இரக்கத்தைப் பெற்ற 70 வயது டிக்கிரி யானை நேற்று மாலை திடீரென உயிரிழந்தது. இது உலகெங்கிலும் உள்ள டிக்கிரியின் மேல் அன்புகொண்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வயோதிகத்தினாலேயே யானை உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் ட்ரூ தெரிவித்துள்ளார். 70 வயதுப் பெண் யானை டிக்கிரியின் இறுதிச் சடங்கு கேகாலையில் இன்று நடக்கவுள்ளது.