உலகம்

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? - ஐ.நா.வை அதிரவைத்த கிரெட்டா துன்பெர்க் 

செய்திப்பிரிவு

ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமி காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனி நபராகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கெனவே ஸ்வீடனில் பருவநிலையைக் காக்க பள்ளி வேலை நிறுத்தம் என்ற போராட்டத்தை ஆரம்பித்து அதை சர்வதேச அளவில் மிகப்பெரிய இயக்கமாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில் ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் திங்கட்கிழமை கிரெட்டா பேசினார். உலகத் தலைவர்களுக்கு அவரது செய்தி என்ன என்று கேட்கப்பட்டபோது, அவர் ஆற்றிய உரை தற்போது சர்வதேச அளவில் பலரால் புகழப்பட்டு வருகிறது.

அவரது முழுமையான பேச்சு:

''எனது செய்தி இதுதான். நாங்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடப்பது எல்லாம் தவறு. நான் இங்கு இருக்க வேண்டியவள் அல்ல. கடலுக்கு அந்தப் பக்கம் நான் பள்ளியில் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எல்லாம் எங்களைப் போன்ற இளைஞர்களிடம் நம்பிக்கையைத் தேடி வருகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்?

உங்கள் வெற்று வார்த்தைகள் மூலம் என் கனவுகளையும், குழந்தைப் பருவத்தையும் திருடிவிட்டீர்கள். ஆனால் நான் அதிர்ஷ்டம் செய்தவர்களில் ஒருத்தி. மக்கள் அவதிப்படுகின்றனர், இறந்து போகின்றனர், மொத்த சூழலமைப்புகளும் உருக்குலைந்து வருகின்றன. ஒரு வெகுஜன அழிவின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம். இந்த சூழலிலும் பணம் பற்றியும், அழிவில்லாத பொருளாதார வளர்ச்சி பற்றிய மந்திரக் கதைகளையும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்?

30 வருடங்களுக்கும் மேலாக, அறிவியல் தெள்ளத் தெளிவாக கணித்து வருகிறது. ஆனால் (மாற்றத்துக்குத் தேவையான) அரசியலும், தீர்வுகளும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லாத நிலையில், எவ்வளவு துணிச்சல் இருந்தால், அவற்றைக் கவனிக்காமல் இங்கு வந்து, உங்களால் முடிந்ததைச் செய்து வருவதாகச் சொல்வீர்கள்?

நாங்கள் பேசுவது கேட்கிறது, நிலைமையின் அவசரம் புரிகிறது என்கிறீர்கள். ஆனால் நான் எவ்வளவு வருத்தப்பட்டாலும், எவ்வளவு கோபப்பட்டாலும் அதை நம்புவதாக இல்லை. ஏனென்றால் உங்களுக்கு உண்மையில் நிலைமையின் அவசரம் புரிந்திருந்தும், தொடர்ந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தீயவர்களாக இருக்கக்கூடும். அதனால் உங்களை நான் நம்ப மறுக்கிறேன்.

அடுத்த பத்து வருடங்களில் பைங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைப் பாதியாகக் குறைத்தாலும், மனிதனால் கட்டுப்படுத்த முடியாத அளவு ஆபத்து வராமல் இருக்க, வெப்பம் இன்னும் 1.5 டிகிரிக்கு மிகாமல் இருக்க 50 சதவீத வாய்ப்பே உள்ளது.

இந்த 50 சதவீதம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இதில் டிப்பிங் பாயிண்டுகள், காற்று மாசினால் ஏற்படும் கூடுதல் வெப்பம், காலநிலை நீதி குறித்த மற்ற அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. எனவே 50 சதவீத ஆபத்து எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நாங்கள்தான் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

சில தொழில்நுட்பத் தீர்வுகளைச் சொல்லி எப்போதும் போல இதைப் பேசிக் கடக்கலாம் என்று நீங்கள் எங்களிடம் நடிப்பதற்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? இன்றைய பைங்குடில் வாயு வெளியேற்ற அளவுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அதைக் கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி அடுத்த எட்டரை வருடங்களுக்குள் மொத்தமாகத் தீர்ந்துவிடும்.

இந்தக் கணக்குகளை வைத்துக்கொண்டு எந்தத் தீர்வுகளும், திட்டங்களும் இன்று இங்கு தரப்படாது. ஏனென்றால் இந்தத் தரவுகள் உங்களை அசவுகரியமாக்குகிறது. உள்ளதை உள்ளபடி சொல்வதற்கான முதிர்ச்சி உங்களிடம் இன்னும் வரவில்லை.

நீங்கள் எங்களைக் கைவிடுகிறீர்கள். ஆனால், இளைஞர்கள் உங்கள் துரோகத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்கால சந்ததியின் ஒட்டுமொத்தப் பார்வையும் உங்கள் மீதுதான் இருக்கிறது. எங்களை நீங்கள் ஏமாற்றினால் உங்களை நாங்கள் எப்போதும் மன்னிக்க மாட்டோம்.

இதிலிருந்து உங்களைத் தப்பிக்க விடமாட்டோம். இன்று, இப்போது இந்த உலகம் விழித்துக்கொள்கிறது. உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, மாற்றம் வந்து கொண்டிருக்கிறது''.

இவ்வாறு கிரெட்டா துன்பெர்க் பேசினார்.

அவர் பேசி முடித்ததும் அங்கு கூடியிருந்தவர்களின் கைத்தட்டால் அரங்கம் அதிர்ந்தது. இதே வேளையில் ஐ.நா. சபைக்குள் ட்ரம்ப் நுழையும்போது, ஓரமாக நின்று கொண்டிருந்த கிரெட்டா, அவரை முறைத்துப் பார்க்கும் வீடியோ வைரலாகப் பரவியது.

ஆனால, கிரெட்டாவின் உரையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரம்ப், “பிரகாசமான மற்றும் அற்புதமான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மகிழ்ச்சியான பெண் போல் இவர் இருக்கிறார். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் கிரெட்டாவைக் கிண்டல் செய்திருக்கிறார் என்று ட்ரம்ப்பின் இந்த ட்வீட்டுக்கு கண்டனங்கள் எழுந்துள்ள வேளையில் கிரெட்டாவின் உரையைப் பிரபலங்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT