இராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இராக் ஊடகங்கள் தரப்பில் கூறும்போது, “இராக் தலை நகடர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று( செவ்வாய்க்கிழமை) இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரம் இதுவரை வெளிவரவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இராக்கில் ஷியா பிரிவினரைக் குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். மேலும் அமெரிக்க படைகளுக்கு எதிராக ஐஎஸ் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இந்தத் தாக்குதலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருப்பார்கள் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஸுக்கு எதிரான போர்
ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் இராக்கில் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இராக் நடவடிக்கையில் ஈடுபட்டது.