ஜிம்பாப்வே நாட்டை 37 ஆண்டுகள் ஆட்சி செய்த ராபர்ட் முகாபே புற்றுநோயால் இறந்ததாக அதிபர் எம்மர்சன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
முகாபே எதற்காக சிங்கப்பூருக்கு சிகிச்சை எடுக்கச் சென்றார், அவரது மறைவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினராலும், ஜிம்பாப்வே அரசாலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் முகாபே புற்றுநோயால் இறந்ததாக ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தித்தாள் நேர்காணல் ஒன்றில் எம்மர்சன் கூறுகையில், “முன்னாள் அதிபர் முகாபே புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அதனைச் சரிப்படுத்த முடியாத நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்குவதில் எந்தப் பயணும் இல்லை என்பதால் சிகிச்சை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்” என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதாக எம்மர்சன் தெரிவித்தார்.
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே கடந்த 1980-ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. இதையடுத்து, 1980 முதல் 1987 வரையில் ராபர்ட் முகாபே (93) பிரதமராகப் பதவி வகித்தார். பின்னர் 1987 முதல் அதிபராகப் பதவி வகித்து வந்தார். உலகிலேயே மிகவும் வயதான ஆட்சியாளராக முகாபே விளங்கினார்.
இந்நிலையில் ஜிம்பாப்வே ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதன் மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.