வளைகுடா பகுதியின் பாதுகாப்புக்கு, வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்தலாக உள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “வெளிநாட்டு சக்திகள் எப்போதும் வலியையும், துயரத்தையும் தரக் கூடியவை. அவர்களை நமது ஆயுதப் பந்தயத்தில் அனுமதிக்கக் கூடாது. வளைகுடா பகுதியில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் ஈரான் முன் வைக்கும்” என்றார்.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. நாங்கள்தான் நடத்தினோம் என்றால் அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று ஈரான் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகமானதைத் தொடர்ந்து சவுதிக்கு அமெரிக்கா தனது பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.