ஃபவாத் ஹுசைன் ( இடதுப் பக்கம் இருப்பவர்) 
உலகம்

ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வரவில்லை: விமர்சித்த பாக். அமைச்சருக்கு இந்திய நெட்டிசன்கள் பதிலடி

செய்திப்பிரிவு

கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிய ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வரவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு 7 நாட்கள் சுற்றுப் பயணமாக இண்டிய பிரதமர் மோடி சென்றுள்ளார். அதில் முதல்கட்டமாக,
டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து பங்கேற்றார்.

சுமார் 50,000க்கும் அதிகமான இந்திய அமெரிக்க வாழ் மக்கள் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மோடி - ட்ரம்ப் இருவரும் இணைந்து பயங்கரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்துப் பேசினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மோடி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் ஹவுடி மோடி நிகழ்ச்சியை பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம்பிக்கையில்லாத நிகழ்ச்சி... கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து அமெரிக்கா, கனடா மற்றும் பல நாடுகளிலிருந்து இந்தக் கூட்டத்தை மட்டுமே திரட்ட முடிந்திருக்கிறது. பணத்தின் மூலம் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதை இது காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஃபவாத்தின் இந்த விமர்சனத்திற்கு இந்தியர்கள் பலரும் அவரின் பதிவுக்குக் கீழே நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது அரங்குகள் முழுவதும் நிரம்பியே இருந்தன என்பதை விளக்கும் வகையில் புகைப்படங்களைப் பதிவிட்டு அவருக்குப் பதிலடி கொடுத்தனர்.

சந்திரயான் 2 தோல்வியின்போது ஃபவாத் இந்தியப் பிரதமர் மோடியையும், ஐஎஸ்ஆர்ஓவையும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT