உலகம்

வெறுப்பு உமிழும் வசை: மதகுருவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாக். கோர்ட் அதிரடி

பிடிஐ

இன்னொரு பிரிவினர் மீது வெறுப்பை உமிழும் பேச்சிற்காக முஸ்லிம் மதகுரு ஒருவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பகவல்பூர் மாவட்டத்தின் ஹாசில்பூர் பகுதியைச் சேர்ந்த குவிம்பூர் மசூதியில் வழிபாட்டு மதகுருவாக இருந்து வந்த மவுலானா அப்துல் கனி காலைநேர வழிபாடுகளுக்குப் பிறகு மற்றொரு முஸ்லிம் பிரிவினர் மீது கடும் வெறுப்பு உமிழும் வசையைப் பொழிந்ததாக நீதிபதி காலித் அர்ஷத் அவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

சிறைத் தண்டனையோடு, ரூ.7,50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தாக்கிய வாசகங்கள் அடங்கிய வெறுப்பு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த 4 பேருக்கும் சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டது.

முகமது வக்காஸ் என்பவருக்கு 3.5 மாதங்கள் சிறையும் ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் ரபிக் அகமது, முகமது ஸாகித், தலிப் ஹுசைன் ஆகியோருக்கும் 3 மாதங்கள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

பெஷாவரில் நடத்தப்பட்ட நெஞ்சை உறைய வைக்கும் பள்ளிக் குழந்தைகள் மீதான தாக்குதலில் 150 மாணவர்கள் பலியானதையடுத்து தேசிய செயல் திட்டம் ஒன்றை பாகிஸ்தான் உருவாக்கியது. இதில் ஒரு அங்கம் வெறுப்பு உமிழும் பேச்சு ஆகும். இது அங்கு தற்போது தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT