ஜுங்கோ தாபெ 
உலகம்

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலாக அடைந்த பெண் ஜுங்கோ தாபே: டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்

செய்திப்பிரிவு

வரலாற்றின் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாளர்களை வெகு சீக்கிரமாக நாம் மறந்துவிடுகிறோம். அதற்காகத்தானோ என்னவோ, உலகின் அரிய சாதனையாளர்களை நினைவுகூர்வதில் கூகுள் தேடுபொறி என்றுமே ஒரு தனித்துவத்தையே நிலைநாட்டி வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட 15 கிராமி விருதுகளைப் பெற்ற பி.பி.கிங் என்ற அமெரிக்க பாப் இசைக் கலைஞரின் 94-வது பிறந்த தினத்தை அற்புதமான அனிமேஷன் ஓவியங்களில் அழகுபடுத்தி கூகுள் கொண்டாடியது.

அதேபோல கூகுள் டூடுளில் இன்றும் ஒருவர் நினைவுகூரப்பட்டுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலாக அடைந்த ஜுங்கோ தாபெ என்கிற ஜப்பானிய மலையேற்ற சாகச வீராங்கனையின் 80-வது பிறந்த தினம் இன்று. எவரெஸ்ட் மட்டுமல்ல உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மலைகளின் உச்சிகளையும் அவர் தொட்டுள்ளார். அதனை விளக்கும் விதமாக இன்றைய கூகுள் டூடுளில் ஏழு மலைகளைத் தாண்டுவதுபோல அனிமேஷன் ஓவியத்தில் வரைந்து அசத்தியுள்ளனர்.

''சாதனைக்குத் தேவை நுட்பமும் திறமையும் மட்டுமல்ல, அதில் தன்னம்பிக்கையே முதலிடம் வகிக்கிறது. அதனைப் பணம்கொடுத்து வாங்கவோ மற்றவர்களால் வழங்கப்படவோ முடியாது. அது முழுக்கமுழுக்க இதயத்திலிருந்து உருவாக வேண்டும்.

மே 16, 1975 இல் எவரெஸ்ட் மலைச் சிகரத்தைத் தொட்டு திரும்பியபோது ஜப்பானின் பேரரசர், பட்டத்து இளவரசர், இளவரசி ஆகியோரிடம் பாராட்டுகளைப் பெற்றது இன்னுமொரு சாதனை, அதன் பிறகு நான் வீடு திரும்ப இரண்டு மாதங்கள் ஆனது ... ஏனெனில் என் மூன்று வயது மகள் என்னைச் சுற்றிவந்த எல்லா கேமராக்களுக்கும் அவள் பயந்தாள்.''

இவ்வாறு தெரிவிக்கும் ஜுங்கோ தாபே 1939-ல் இதேநாளில் புகோஷிமாவுக்கு அருகில் மிஹாரு என்ற ஒரு சின்னஞ்சிறு நகரத்தில் ஒரு பலவீனமான குழந்தையாகப் பிறந்தார். பத்து வயதிலேயே பள்ளிக்கூட சிற்றுலா ஒன்றின் மூலமாக நாசு என்ற மலையில் ஏறினார். அதன்பிறகு உயர்நிலைப் பள்ளி படிக்கும் காலங்களில் ஓரிரு மலைகளிலேயே அவர் ஏறினார், காரணம், மலையேற்றம் என்ற விலைமதிப்புமிக்க பொழுதுபோக்கிற்கு வீட்டில் ஆதரவு இல்லாத சூழ்நிலையே இருந்தது.

பிற்காலத்தில் ஷோவா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றபோதுதான் இவர் பல்கலைக்கழகத்தின் மலை ஏறும் கிளப்பில் உறுப்பினராகச் சேர்ந்து தனது விருப்பத்தை மீண்டும் தொடங்கினார். அங்கிருந்து வெளியே வந்தபிறகும் ஜப்பான் லேடீஸ் கிளிம்பிங் கிளப் என்ற அமைப்பை "நாங்கள் ஒரு வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வோம்" என்ற வாசகத்துடன் உருவாக்கினார்.

உண்மையில் அதன்பிறகு உலகின் ஏழு கண்டங்களிலும் 150 மலைகளின் உச்சிகளையும் தொட்டுத் திரும்பினார் ஜுங்கோ தாபே.

2012-ல் அவருக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்தும் தனது மலையேற்றத்தை ஜுங்கோ தாபே நிறுத்தவில்லை. அதன்பிறகும் அவர் மலையேற்றத்தில் ஆர்வம் காட்டினார். நோய் தீவிரம் பாதித்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிஅன்று மறைந்தார்.

அவரது புகழ் பெற்ற வாசகம் இது: "கைவிடாதீர்கள், உங்கள் தேடலைத் தொடருங்கள்".

SCROLL FOR NEXT