பெஷாவர்,
பாகிஸ்தானில் இன்று காலை மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியானதாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கில்கிட்-பலுசிஸ்தான்(ஜிபி) எல்லையிலுள்ள பாபூசர் டாப் மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கில்ஜித்-பலுசிஸ்தான் மாகாண முதல்வரின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் அர்ஷத் கூறுகையில், ''விபத்துக்குள்ளான பேருந்து இன்று காலை ஸ்கார்டு நகரத்திலிருந்து ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உட்பட 40 பயணிகள் இருந்தனர். விபத்தின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 26 சடலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்தனர். படுகாயமடைந்த 13 பயணிகள் சிலாஸில் உள்ள மாவட்டத் தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்'' என்றார்.
இந்த விபத்து குறித்து டயமர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் முகமது வக்கீல் கூறியதாவது:
''ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இந்தப் பயணிகள் பேருந்து மலைப்பாதையின் ஒரு திருப்பத்தைக் கடக்கும்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது டிரைவர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் மலை மீது மோதியது. டிரைவர் எவ்வாறு வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு மற்றும் போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழந்த பயணிகளின் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து சடலங்களை ஸ்கார்டுவுக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளது. அதற்காக கில்கிட்-பலுசிஸ்தான் அரசாங்கத்திடம் ஒரு ஹெலிகாப்டர் கோரப்பட்டுள்ளது''.
இவ்வாறு டயமர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- பிடிஐ