கராச்சி,
''மரணமடைந்த பாகிஸ்தானிய இந்துப் பெண் என்னைக் காதலித்தார், திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினார்'' என்று விடுதியில் இறந்துகிடந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகிகத்தின்பேரில் கைதாகியுள்ள பாகிஸ்தான் இளைஞர் இன்று தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானில் லர்கானா மாவட்டத்தில் உள்ள பிபி ஆசிஃபா பல் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவந்தார் மாணவி நிம்ரிதா சாந்தினி குமாரி. அவர் ஒரு சமூக ஆர்வலரும் ஆவார். இவர் கடந்த திங்கள்கிழமை தனது கல்லூரி விடுதியில், கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட நிலையில் கட்டிலில் இறந்து கிடந்ததை உடன் பயிலும் மாணவிகள் கண்டுபிடித்தனர்.
விடுதியில் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், " பிரேதப் பரிசோதனையில் கொலை என்பது தெரிய வந்துள்ளதால் இந்த கொலை வழக்கு குறித்து நியாயமான விசாரணை வேண்டும்" என்று கோரியிருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் முடுக்கியுள்ளனர்.
இந்த கொலைவழக்கில் 32 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இறந்தவரின் செல்போனில் இருந்து அழைப்புத் தரவைக் கண்டுபிடித்த பின்னர் பாதிக்கப்பட்ட சாந்தினியுடன் செல்போன் அழைப்புடன் தொடர்புகொண்டதாக அவருடன் கல்லூரியில் படித்து வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான மெஹ்ரான் ஆப்ரோ என்பவர், உயிரிழந்த சாந்தினி தன்னை காதலித்ததாகவும் தன்னை அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் விசாரணையின்போது கூறியுள்ளதாக ட்ரிப்யூன் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. சாந்தினியின் நட்பில் ஆர்வம் காட்டியதற்காக இன்னொரு நபரான வாசிம் மேமன் என்ற நபரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாந்தினி கொலைக்குப் பின் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும் ஆராய்வதில் பாக். போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சாந்தினி பயின்ற கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ''சாந்தினி எப்போதும் கவலையோடு காணப்பட்டதாகவும் அவரை ஏதோ ஒரு சிக்கல் ஆட்டிப்படைத்துள்ளது. அவருடன் பேசிய போது, ''இந்த குழப்பத்திலிருலுந்து வெளியேற எனக்கு வலிமை தேவை'' என்று சாந்தினி அழுவார். ஆனால் தன்னுடைய வேதனைக்கான காரணங்களை அவர் ஒருபோதும் வெளிப்படுத்திக்கொண்டதில்லை.'' என்றார்.
மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மசூத் பங்காஷ்ஷை சாந்தினியின் குடும்பத்தினர் சந்தித்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது சாந்தினியின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
சாந்தினியின் விடுதி அறையில் இருந்து படங்கள் மற்றும் தேர்வு அனுமதிச் சீட்டு உள்ளிட்ட பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலான இந்தக் கொலை வழக்கில் புதிய தடயங்கள் ஏதாவது புலப்படும் எனக் கருதி சாந்தினியின் மடிக்கணினியும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை கூறியுள்ளது.
-பிடிஐ