எங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விரக்தியின் அடையாளம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் கூறும்போது, “இது அமெரிக்காவின் விரக்தியின் அடையாளம். அவர்கள் ஈரான் மீது இவ்வாறு தொடர்ந்து பொருளாதாரத் தடையை விதிப்பது எதனை உணர்த்துகிறது என்றால், ஈரானை அவர்கள் காலுக்குக் கீழே பணிய வைக்கும் முயற்சியில் தோற்றுவிட்டார்கள் என்பதை விளக்குகிறது.
ஆனால், அமெரிக்காவின் இந்த முயற்சி ஆபத்தானது. ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று அவர் தெரிவித்தார்.