பாகிஸ்தான் அரசின் சார்பில் இயக்கப்படும் பிஐஏ சர்வதேச விமானங்கள். 
உலகம்

பயணிகள் வராதபோதும் காலியாகச் சென்ற 46 விமானங்கள்: பாகிஸ்தான் ஏர்லைன்ஸில் நடத்தப்பட்ட தணிக்கை அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்

கடந்த 2016-17 ஆம் ஆண்டில் எந்தவொரு பயணியும் இல்லாமல் 46 விமானங்களை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) இயக்கியதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் தேசிய விமான நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2016-17 ஆண்டில் பாகிஸ்தான் விமான சேவைப் பணிகள் குறித்து தணிக்கைக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதன் அறிக்கையை இன்று வெளியிட்டனர். அதில் பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜியோ டிவி கூறியுள்ளதாவது:

''பாகிஸ்தான் இன்டர்நேஷ்னல் ஏர்லைன்ஸ் (PIA), பயணிகள் வராதபோதும் இஸ்லாமாபாத்திலிருந்து 46 விமானங்களை இயக்கியிருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆளில்லாத வெற்று விமானங்களை இயக்கியதன் மூலம் விமான நிறுவனம் மிகப்பெரிய நிதி இழப்பைச் சந்தித்துள்ளது.

கடந்த 2016 முதல் 2017 வரையிலான காலகட்டங்களில் ஆளில்லாத விமானங்களை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இயக்கியதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பாகிஸ்தான் அரசின் தேசிய விமான நிறுவனம் 180 மில்லியன் டாலர் (1.1 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவில் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை.

இவை தவிர, சுமார் 36 ஹஜ் விமானங்களும் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டன என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT