உலகம்

சவுதிக்கு படைவீரர்களை அனுப்பும் அமெரிக்கா

செய்திப்பிரிவு

சவுதியில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வளைகுடா பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சவுதிக்கு அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சவுதிக்கு அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவதை ‘இயற்கையான தற்காப்பு ’என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பெர் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். இந்தத் தடையின் மூலம் ஈரானின் மத்திய வங்கிகளின் மீது கவனம் செலுத்த ட்ரம்ப் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் என்று அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

நாங்கள்தான் நடத்தினோம் என்றால் அதற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT