பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டில் அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி : கோப்புப்படம் 
உலகம்

வரும் 23-ம் தேதி இம்ரான் கானுடன் சந்திப்பு; 24-ம் தேதி பிரதமர் மோடியுடன் சந்திப்பு: ட்ரம்ப் திட்டம்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்

நியூயார்க் நகரில் வரும் திங்கள்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்திக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்த நாளில் அதாவது செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.

ஹூஸ்டன் நகரில் நாளை நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஒரே மேடையில் பேசும் அதிபர் ட்ரம்ப் அடுத்த நாள் பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்து பேசுகிறார்.

நியூயார்க்கில் நடக்கும் 74-வது ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தின் இடையே பிரதமர் மோடியையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்தித்து அதிபர் ட்ரம்ப் பேச உள்ளார் என்று வெள்ளை மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹூஸ்டன் நகரில் நாளை நடக்கும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அங்கிருந்து புறப்பட்டு நியூயார்க் செல்கிறார். நியூயார்க் செல்லும் வழியில் ஓஹியோ மாநிலத்தில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸனைச் சந்தித்து அதிபர் ட்ரம்ப் பேச உள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், " ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியி்ல் பிரதமர் மோடியுடன் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப், அங்கிருந்து ஓஹியோ சென்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸனைச் சந்தித்து உரையாடுகிறார்.

23-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்து ட்ரம்ப் பேச உள்ளார். அதன்பின் 24-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில் அதிபர் ட்ரம்ப் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு இடையே பிரதமர் மோடியையும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸனையும் சந்தித்துப் பேச உள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், போலந்து நாட்டின் அதிபர் ஆன்ட்ரிஸ் செபாஸ்டியன், நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன், சிங்கப்பூர் பிரதமர் லீ, எகிப்து பிரதமர் அல் சிஸ், கொரிய அதிபர் மூன் ஆகியோரைச் சந்தித்து அதிபர் ட்ரம்ப் பேச உள்ளார் " எனத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடியை பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டில் சந்தித்த நிலையில் மீண்டும் சந்தித்து அதிபர் ட்ரம்ப் பேச உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு, வர்த்தக உறவு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பலப்படுத்தும்.

பிடிஐ

SCROLL FOR NEXT