ஏமனின் ஹோடைடா பகுதியில் சவுதி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏமன் கிளர்ச்சியாளர்கள், ''ஏமனின் கடற்கரை நகரான ஹோடைடாவில் உள்ள நான்கு பகுதிகளில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. சவுதி கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தங்களது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர்.
சவுதி எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சவுதி நடத்திய தாக்குதல் இது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்காவும், சவுதியும் குற்றம் சாட்டி வருகிறது.
ஏமன் போர்
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.