பிரதிநிதித்துவப் படம் 
உலகம்

கலிபோர்னியாவில் 4-வது மாடியிலிருந்து குதித்து ஃபேஸ்புக் நிறுவன ஊழியர் தற்கொலை

செய்திப்பிரிவு

சான்பிரான்ஸிஸ்கோ

கலிபோர்னியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் தலைமையகக் கட்டிடத்தின் 4-வது மாடியிலிருந்து அந்நிறுவனத்தின் ஊழியர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக எஃபே நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியுள்ளதாவது:

''நேற்று காலை 11 மணியளவில் ஜெபர்சன் டிரைவ் பகுதியில் இயங்கிவரும் ஃபேஸ்புக் நிறுவனக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து ஒருவர் குதித்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. தீயணைப்பு மீட்புப் பணியாளரும் நாங்களும் அங்கு சென்றபோது 4-வது மாடியிலிருந்து குதித்தவர் எந்தவிதமான செயலும் இன்றிக் கிடந்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை நாங்கள் உறுதி செய்தோம்.

இதுகுறித்து நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணையில் இதில் வேறு யாரும் சம்பந்தப்படவில்லை என்பதும் முழுக்க முழுக்க தற்கொலை என்பதும் தெரியவந்தது. தற்கொலை செய்துகொண்டவர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர் என்பதும் விசாரணையின்போது அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்''.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"எங்கள் மென்லோ பார்க் தலைமையகத்தில் எங்கள் ஊழியர்களில் ஒருவர் இன்று காலமானார் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மேலும் ஊழியரின் குடும்பத்தினரை நேரில் தொடர்பு கொள்ளவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த மரணம், ஒரு தற்கொலை என்பது வெளிப்படையானது. இதில் எந்தவிதமான தவறான பிரச்சினைகளும் இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இது தொடர்பாக நாங்கள் காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்பதையும் மற்றும் இதுதொடர்பாக ஊழியர்களுக்கும் ஆதரவை வழங்கவும் எங்கள் நிறுவனம் தயாராக உள்ளது. தற்கொலையில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த வருத்தங்கள்''.

இவ்வாறு பேஸ்புக் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT