உலகம்

சவுதி மீது நடத்தப்பட்டது போர்ச் செயல்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்

செய்திப்பிரிவு

சவுதியில் எண்ணெய் ஆலை மீதான தாக்குதல் போர்ச் செயல் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

வளைகுடா பகுதியில் மோதல் வலுத்துவரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ சவுதி அரேபியாவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமையன்று சவுதி இளவரசர் முகமது சல்மானுடன் சவுதியின் பிரபல எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மைக் போம்பியோ கூறும்போது, “ சவுதி எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு முன்னர் நடத்தப்படாத தாக்குதல். இது சவுதிக்கு எதிராக நடத்தப்பட்ட போர்ச் செயலாகும்.
மேலும் இந்தத் தாக்குதல் தெற்குப் பகுதியிலிருந்து நடத்தப்படவில்லை. எனவே ஏமன் கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை” என்றார்.

சவுதி அரேபியாவைத் தொடர்ந்து அடுத்து ஐக்கிய அமீரத்துக்கு மைக் போம்பியோ செல்ல உள்ளார்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது ஏமன் தீவிரவாதிகள் என்றாலும் அதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று ஈரான் மறுத்தது. மேலும் அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடந்த வாய்ப்பே இல்லை என்றும் ஈரான் தெரிவித்தது.

இந்நிலையில் சவுதி எண்ணெய் ஆலை தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.

SCROLL FOR NEXT