கோலா லம்பூர்
சர்ச்சைக்குரிய முஸ்லிம் பிரச்சாரகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் மோடி என்னிடம் எந்தவிதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதிர் முகமது விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்லாமிய மதப்பிரச்சாரம் செய்பவரான மும்பையைச் சேர்ந்த 53 வயது ஜாகீர் நாயக் மீது தீவிரவாதம் தொடர்பாக ஐஎன்ஏ பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அவரின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கப் பிரிவினர் முடக்கியுள்ளனர். ஆனால், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து மலேசியாவில் ஜாகீர் நாயக் வாழ்ந்து வருகிறார். மலேசிய அரசும் ஜாகீர் நாயக்கிற்கு நிரந்திர குடியுரிமை வழங்கியுள்ளது.
இந்த சூழலில் கடந்த மாதத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மலேசியாவில் வாழும் இந்துக்களுக்கும், சீனர்களுக்கும் எதிராக ஜாகீர் நாயக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார்கள் எழுந்தன. சீனவர்கள் விருந்தாளிகள் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜாகீர் நாயக் பேசினார். இதனால் மலேசியாவில் பொதுமக்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்ய ஜாகீர் நாயக்கிற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு கடந்த 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்கச் சென்றார்.
இந்த மாநாட்டின் போது மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதுவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது மலேசியாவில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மதப்பிரச்சாரம் செய்பவரான ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோடி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விஜய் கோகல ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அழைத்து வருவது குறித்து மலேசிய பிரதமரிடம் பிரதமர் மோடி பேசினார்" என்று தெரிவித்தார்.
இதனிடையே கோலாலம்பூரில் உள்ள வானொலிக்கு மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது
. அதற்கு பிரதமர் மகாதிர் முகமது பதில் அளிக்கையில், " ரஷ்யாவின் விளாதிவோஸ்தக் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த போது, ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பிரதமர் மோடி என்னிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.
சர்ச்சைக்குரிய வகையில் மலேசியாவில் பொதுமக்கள் மத்தியில் பேச ஜாகீர் நாயக் அனுமதிக்கப்படமாட்டார். ஜாகீர் நாயக் இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. கடந்த மலேசிய அரசு அவருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியது என நினைக்கிறேன்.
நிரந்தர குடியுரிமையில் வசிப்பவர் ஒருவர் நாட்டின் நிர்வாக முறை, அரசியல் குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆனால், அதை ஜாகீர் நாயக் மீறிவிட்டார். அதனால் இனிமேல் ஜாகீர் நாயக் பொதுமக்கள் மத்தியில் பேச அனுமதிக்கப்படமாட்டார். ஜாகீர் நாயக்கை செல்லும் இடங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம், ஆனால், அவரை யாரும் ஏற்கத் தயாராக இல்லை" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்