உலகம்

பிரதமர் மோடி, இம்ரான் கானை சந்தித்து பேச திட்டம்: ட்ரம்ப் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நியூயார்க்

இந்திய - பாகிஸ்தான் உறவு தொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இருநாட்டு பிரதமர்களையும் சந்தித்து பேசப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவையும் ரத்து செய்தது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயல்கிறது. காஷ்மீர் பிரச்சினை இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை என்று பலமுறை இந்தியா உலக நாடுகளுக்குத் தெரிவித்துவிட்டது. உலக நாடுகளும் இந்தியாவின் கருத்தை ஆதரித்துள்ளன.

அப்படி இருந்தும் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இருநாடுகளும் கேட்டுக்கொண்டால் மட்டும் தலையிடத் தயார் என ட்ரம்ப் அறிவித்தார்.

இந்தநிலையில், அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாக வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி புறப்படுகிறார். ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் முன்பாக பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி அமெரிக்க இந்தியர்கள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் தானும் கலந்து கொள்வதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதனிடையே ட்ரம்ப் மீண்டும் இந்திய - பாகிஸ்தான் உறவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறுகையில் ‘‘இந்திய - பாகிஸ்தான் உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை விரைவில் சந்தித்து பேசவுள்ளேன்’’ எனக் கூறினார்.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்றுகிறார். அப்போது இருநாட்டு தலைவர்களையும் ட்ரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுளளது.

SCROLL FOR NEXT