உலகம்

6 லட்சம் ரோஹிங்கியாக்கள் மியான்மரில் இருப்பது ஆபத்து: ஐ.நா.

செய்திப்பிரிவு

ரோஹிங்கியா முஸ்லிம்கள் 6 லட்சம் பேர் மியான்மரில் இருப்பது இன அழிப்புக்கான ஆபத்து என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதல் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது.

இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆங் சான் சூச்சிக்கு உலக அரசியலில் அவப் பெயர் ஏற்பட்டது.

இந்த நிலையில் மியான்மரில் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிமகள் இருப்பது இன அழிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து என்று ஐ. நா. பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ. நாவின் விசாரணைக் குழு அதிகாரி ஒருவர் கூறும்போது” மியான்மர் இனப்படுகொலை எண்ணத்தை தொடர்ந்து வருகிறது. அங்குள்ள 6 லட்சம் மரோஹிங்கியாக்கள் இனப்படுகொலைக்கான அபாயத்தில் உள்ளனர். அவர்கள் மனிதாபிமானமற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.ஆதாரங்களை அழிப்பது, நியாயமான விசாரணைகளை நடக்க அனுமதி மறுப்பது.

ரோஹிங்கியா முஸ்லிம்களின் இருப்பிடங்களை அழித்தல் போன்ற பணிகளில் மியான்மர் அரசு ஈடுபட்டுள்ளது”
என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT