ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள், அலுவல் சார்ந்த பயணங்களில் இருக்க வேண்டிய அவசியம் நேரும்போது, தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை அனுப்பும் வகை செய்ய புதிய வழிமுறை பின்பற்றப்படவுள்ளது.
அதன்படி, இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் பெண்கள், வெப்பநிலையை கட்டுப்படுத்தக்கூடிய செயலியுடன் கூடிய ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும். தாய்ப்பாலை முறையாகக் கொண்டுபோய் சேர்க்க, பார்சல் மற்றும் அனுப்பப்படும் செலவுகளை ஐபிஎம் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎம்மின் மொத்தப் பணியாட்களில் 29 சதவீதத்தினர் பெண்கள். வரும் செப்டம்பரில் இருந்து இந்த சேவையைத் தொடங்க இருக்கிறது ஐபிஎம்.
இந்தப் புதிய முயற்சி குறித்து ஐபிஎம் நிறுவனத்தின் நலத் திட்டங்களுக்கான துணைத் தலைவர் பார்பரா ப்ரிக்மியர் கூறும்போது, "எத்தனை பெண்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்று, புது முயற்சியாக இதை சோதித்துப் பார்க்க இருக்கிறோம்.
இந்த முயற்சியின் மூலம் பெண்கள் வீட்டையும் அலுவலகத்தையும் ஒன்றாக நிர்வகிக்க முடியும் என்றால், இது தொடரும்" என்றார்.
இது பற்றி ஐபிஎம் செய்தித் தொடர்பாளர் கேரி ஏட்டியரி கூறும்போது, "முதலில் உள்நாட்டுப் பயணங்களில் தொடங்கப்படும் இச்சேவை, பின்னர் உலகளாவிய அளவில் விரிவுபடுத்தப்படும்" என்றார்.