இறந்த பின்பு மனித உடல்கள் அசைகின்றன என்று கூறி மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள்.
அணு முதல் அண்டம் வரையிலான ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகளால் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்பட்டு மனித உலகை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில், மனித உடல் சார்ந்த புதிய ஆராய்ச்சியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.
அதாவது மனித உடல்கள் இறந்து ஒருவருடம்வரை அசையும் தன்மை கொண்டவை என்பதுதான் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அலிசன் வில்சன் மற்றும் அவரது குழுவினர்கள் சுமார் 17 மாதங்கள் 70 மனித உடல்களை கண்காணித்து அவை அசையும் தன்மை கொண்டவை என கண்டறிந்துள்ளனர்.
இறந்த மனித உடலை கேமரா மற்றும் நவீன தொழில் நுட்ப கருவிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்து ஒரு வருடத்தில் உடலின் அசைவை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆய்வு ஆஸ்திரேலியாவின் கேம்ஸ்பரில் உள்ள இறந்த உடல்களை பாதுகாக்கும் பண்னையில் நடைபெற்றிருக்கிறது.
’Australian Facility for Taphonomic Experimental Research’ (AFTER) என்று அறியப்படும் இந்த பண்ணை, ஆஸ்திரேலியாவில் பிரேத பரிசோதனை இயக்கத்தில் முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றது.
இந்த ஆராய்ச்சி குறித்து அலிசன் வில்சன் கூறும்போது, “மனித உடல்கள் சிதைவடையும்போது இந்த அசைவு நிகழ்கிறது. உடலில் உள்ள தசை நார்கள் வறண்டு போகும் போது உடலில் அசைவுகள் ஏற்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்”
இதன் மூலம் காணமல் போனவர்கள் ஒருவேளை மரணமடைந்திருந்தால்,அவர்களது உடல்கள் மங்குவதற்கு எடுத்து கொண்ட கால அளவை கணக்கில் கொண்டு அவர்கள் இறந்த சரியான நேரத்தை போலீஸார் கண்டறிய உதவும்” என்று வில்சன் தெரிவித்துள்ளார்.
தடய அறிவியல் குறித்த சர்வதேச அளவிலான பத்திரிகையில் வில்சனின் ஆராய்ச்சி இடப்பெற்றுள்ளது.