பிரதமர் மோடி : கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி: 60 முக்கிய அமெரிக்க எம்.பிக்கள் வருகை

பிடிஐ

ஹூஸ்டன்

அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 60 முக்கிய எம்.பி.க்களும் கலந்து கொள்கிறார்கள்.

இதில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க இந்துஎம்.பி. துளசி கப்பார்ட் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

அமெரிகாவுக்கு 7 நாட்கள் பயணமாக வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி புறப்படுகிறார். ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் முன்பாக பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதில் முக்கியமானது. ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இதில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

'ஹவ்டி மோடி' அதாவது ஆங்கிலத்தில் 'ஹவ் ஆர் யு மோடி' என்பதன் சுருக்கமாக ஹவ்டி மோடி என்று நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி நடத்தும் எஸ்பீடியன் அமைப்பின் தலைமைநிர்வாகி ஜிதன் அக்ரவால் கூறுகையில், " இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் மேடிஸன் சதுக்கத்தி்ல நடந்த கூட்டத்தில் கூட இந்த அளவுக்கு இந்தியர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த முறை இந்தியர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

இந்தியர்களுடன் சேர்ந்து இந்த முறை அமெரிக்காவின் 60 முக்கிய எம்.பி.க்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள், செனட் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட விழாக்களிலேயே மிகப்பெரிய விழாவாக இது அமையும். அமெரிக்க எம்.பி.க்கள், வர்த்தக தலைவர்கள், பிரதிநிதிகள் என ஏராளமானோர் வருகை தர உள்ளனர்

குறிப்பாக அமெரிக்க எம்.பி.க்களில் முக்கியமானவர்களான ஜான் கார்ன், டெட் குரூஸ், அல் கிரீன், பீட் ஒல்சன், ஷீலா ஜேக்ஸன் லீ, சில்வியா கார்ஸியா, கிரேக் அபாட், சின்டி ஹேட் ஸ்மித், அமி பேரா, பிரையன் பாபின், ராஜா கிருஷ்ண மூர்த்தி, துளசி கபார்ட், பிராட் ஷெர்மன், நியூயார்க் ஆளுநர் எலியாட் ஏஞ்சல் ஆகியோர் பங்கேற்கின்றனர்

மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதால், வருகை தரும் அனைவரின் வாகனங்களை நிறுத்தவதற்கு தற்காலிக இடம் பெரிய சவாலாக இருக்கிறது. அனைத்தையும் தாண்டி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திட்டமிட்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

ஹீஸ்டனில் உள்ள இந்தியர்கள்தான் அமெரிக்க அரசியலில் அதிகமாக கலந்துள்ளார்கள், செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் டெக்ஸாஸ் மற்றும் இந்தியா இடையே வர்த்தகம் அதிகரிக்கும்தளமாக ஹூஸ்டன் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் எரிசக்தி தலைநகரமாக ஹூஸ்டன் இருந்து வருவதால், எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சிறந்த கூட்டாளியாக இருக்கும் என்பதால் ஹூஸ்டன் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT