இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீக்கு அந்நாடு மலேசியாவை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. இதன் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியுள்ளது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்தது.மலேசியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எல்லாப் புகையும் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை அல்ல. காற்று மாசு மலேசியாவால்தான் உருவாகியுள்ளது என்று இந்தோனேசியா பதிலளித்தது.
இதனிடையே இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீக்கு மலேசியாவிலூள்ள பிரபல பாமாயில் தொழிற்சாலை உட்பட நான்கு நிறுவனங்கள்தான் காரணம் என்று இந்தோனேசியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது இந்தோனேசியா நடவடிக்கை எடுக்கலாம் என்று மலேசியா கூறியுள்ளது.