இஸ்லாமாபாத்,
காஷ்மீர் விவகாரத்தில் உலகம் இந்தியாவைத்தான் நம்புகிறது. பாகிஸ்தானை அல்ல. சர்வதேச சமூகத்திடம் இருந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானால் ஆதரவைப் பெற முடியவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் 58 நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கின்றன என்று பிரதமர் இம்ரான் கான் பேசி வரும் நிலையில், அவரின் அமைச்சர் இந்தியாவுக்குத்தான் உலக நாடுகள் ஆதரவாக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள ஹம் நியூஸ் சேனலுக்கு பாகிஸ்தான் அமைச்சர் இஜாஸ் அகமது ஷா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை உலக நாடுகள் நம்பவில்லை. காஷ்மீரில் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்க மறுக்கப்படுகிறது. மருந்துகள் கூட கிடைக்கவில்லை என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால், மக்கள் எங்களை நம்பவில்லை. சர்வதேச சமூகம் இந்தியாவைத்தான் நம்புகிறது.
பாகிஸ்தானில் ஆளும் உயர்தர வர்க்கம் நாட்டை அழித்துவிட்டது. நாட்டின் நற்பெயரைச் சீரழித்துவிட்டது. நாங்கள் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். பாகிஸ்தானைச் சீரழித்ததற்கு இதற்கு முன் ஆண்ட பேநசீர் பூட்டோ, நவாஸ் ஷெரீப், பர்வேஷ் முஷாரப் என அனைவரும் பொறுப்பாவார்கள். பாகிஸ்தான் அரசு இதை அறிய ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும்.
பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத் உத் தவா உள்ளிட்ட அமைப்புகளை பிரதான அரசியல் நீரோட்டத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்துள்ளது. இதுவரை ஜமாத் உத் தவா அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவிதமான கெடுதலும் செய்யவில்லை.
ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாருக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. ஆனாலும் அவர் வழக்கை எதிர்கொள்வார். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளைத் திருத்தி, அவர்களை பிரதான அரசியலுக்குள் கொண்டுவருதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
அனைத்து ஜிகாதி அமைப்புகளையும் கட்டுப்படுத்தி, அங்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவோம். எங்கள் மண்ணில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. அதேசமயம் தீவிரவாதிகளை பிரதான வாழ்க்கை நீரோட்டத்துக்கும் கொண்டுவருவது அரசின் கடமை''.
இவ்வாறு இஜாஸ் அகமது ஷா தெரிவித்தார்.
பிடிஐ