ஈரான் தலைவர்கள் தன்னைச் சந்திக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறுகையில், ''ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் நாட்டமும், விரோதப்போக்கும் தோல்வியில்தான் முடியும். இதனை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மேற்கொண்ட உறுதிப்பாடுகளை மேலும் குறைக்கத் தயாராக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரான் தலைவர்கள் தன்னைச் சந்திக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ஈரான் தலைவர்கள் என்னைச் சந்திக்க விரும்புகிறார்கள். வருகின்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்கிறேன்” என்றார்.
ஆனால், ட்ரம்ப்பின் இந்தக் கருத்து குறித்து ஈரான் தரப்பில் தற்போதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
முன்னதாக, ஈரான் கடந்த வாரம் அணுசக்தி ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்கு வேண்டியதைச் செய்யலாம். எனவே இது தொடர்பாக உள்ள ஒப்பந்தத்தைக் கைவிட முடிவு செய்திருக்கிறோம் என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 2015-ல் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள சில நிபந்தனைகளை மீறி யுரேனியம் தயாரிப்பில் ஈரான் ஈடுபடப்போவதாவாகத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத சோதனை ஒப்பந்தங்களை அவ்வப்போது மீறி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.