உலகம்

ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புத் துறை அமைச்சகம், “ஆப்கானிஸ்தானிலுள்ள சாஹர் அச்யப் மாவட்டத்தில் உள்ள ராணுவத் தளத்தின் நுழைவாயிலில் இன்று (வியாழக்கிழமை) உடலில் குண்டை கட்டிக்கொண்டு நுழைந்த தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்ததில் ஆப்கன் சிறப்புப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் முயன்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

தலிபான்களுடான ஒப்பந்தம் ரத்து

ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்துவரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் முடிவு தலிபான்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தலிபான்கள் ஆப்கனில் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT