இந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. இதன் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியுள்ளது.
சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக் கடிதம் ஒன்றை மலேசிய அரசு வழங்கி இருப்பதாக இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதர் அபிதின் பகர் கூறியுள்ளார்.
அந்தக் கடிதம் குறித்து அபிதின் கூறும்போது, ”கடிதத்தில் மலேசியா எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அவர்கள் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கவே உதவ விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய சுற்றுச் சூழல் அமைச்சர் இதற்கு பதிலளிக்குபோது, “ இந்தோனேசிய அரசாங்கம் காட்டுத் தீயை அணைக்க அதன் திறனுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு வருகிறது. எல்லாப் புகையும் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை அல்ல” என்று தெரிவித்தார்.