கராச்சி,
பாகிஸ்தான் கராச்சி, சிந்து மாநிலத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஒரு லிட்டர் பால் விலை, பெட்ரோல், டீசல் விலையைக் காட்டிலும் அதிகரித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் முஸ்லிம்கள் பலர் ஊர்வலம் செல்வார்கள். அவ்வாறு செல்வோருக்கு பால், பழரசம் போன்றவற்றை மக்கள் இலவசமாக வழங்குவார்கள். அவ்வாறு வழங்குவதற்காக ஏராளமான மக்கள் திடீரென அளவுக்கு அதிகமாக பால் வாங்கியதால் பாலின் தேவை அதிகரித்து விலை உயர்ந்தது.
பாகிஸ்தானில் பெட்ரோல் ஒரு லிட்டர் 113 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆனால், பாலின் தேவை காரணமாக விலை உயர்ந்து பெட்ரோல்,டீசலைக் காட்டிலும் பால் விலை அதிகரித்தது. அதாவது, பால் ஒரு லிட்டர் 140 ரூபாயாக கராச்சி், சிந்து மாநிலத்தில் விற்பனையானது.
வழக்கமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையைக் காட்டிலும் பால் விலை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், மொஹரம் பண்டிகை அன்று பாலின் விலை கிடுகிடுவென அதிகரித்தது.
பால் விலை உயர்வு குறித்து கராச்சி நகரில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், " பால் ஒரு லிட்டர் 120 முதல் 140 ரூபாய் வரை கராச்சி நகரில் விற்பனையானது. திடீரென பால் விலை அதிகரிக்க என்ன காரணம் எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.
கராச்சி நகரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், " ஒவ்வொரு மொஹரம் பண்டிகைக்கும் நாங்கள் ஊர்வலம் செல்பவர்களுக்காக இலவசமாக பால் வழங்குவோம்.
ஆனால், இந்த ஆண்டு நாங்கள் அதை தவிர்த்துவிட்டோம். என் வாழ்நாளில் இதுபோல பால்விலை உயர்வை பார்த்தது இல்லை. அதனால் நாங்கள் இந்த முறை பால் வழங்கவில்லை" எனத் தெரிவித்தார்
கராச்சி ஆணையர் இப்திகார் ஷெல்வானி கூறுகையில், " பால் விலை திடீரென உயர்ந்ததை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களிடம் திடீரென ஏற்பட்ட அதிகபட்ச தேவைதான் விலை உயர்வுக்கு காரணம்" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்