காஷ்மீருக்காக பாகிஸ்தான் குரல் கொடுப்பது பாசாங்குத்தனமானது என்று பலுசிஸ்தான் ஆதரவாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது. மேலும், ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.
அதன்படி இன்று (புதன்கிழமை) ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் கேள்வி எழுப்பியது. ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறி அங்கு சர்வதேச விசாரணை தேவை என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.
இதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி , "காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்துவது அவசியம்" என்றார்.
இந்நிலையில், எங்களது உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என்று இந்தியா கூறியது.
ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் கூறிய கருத்துகளை பலுசிஸ்தான் ஆதரவாளர் கடுமையாக விமர்சித்த்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவில் வசிக்கும் பலுசிஸ்தான் ஆதரவாளரான ரசாக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “ இது பாசாங்குத்தனத்தின் உச்சம். பாகிஸ்தான், பலுசிஸ்தானில் அவர்கள் செய்யும் மனித உரிமை மீறல்களை மறைக்க விரும்புகிறார்கள். ஆனால் காஷ்மீருக்காக ஐக்கிய நாடுகள் சபையில் கண்ணீர் வடிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானிலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்று பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.