அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் மீது காதல் கொண்டிருப்பதாக நடிகரும், முன்னாள் கலிஃபோர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரிடம் சமீபத்தில் இதழ் ஒன்றுக்கு ட்ரம்ப் உங்கள் மீது கூறும் விமர்சனங்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அர்னால்ட் பதில் கூறும்போது, “ட்ரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மை. மக்கள் அமெரிக்காவை எவ்வளவு தூக்கி வீசினாலும், மக்கள் அதிபரைப் பார்த்து எவ்வளவு சிரித்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்கா வரவே விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு மனிதர், ஒரு அதிபரால் அமெரிக்கா மாறிவிடாது என்று'' என்று பதிலளித்தார்.
அமெரிக்காவின் அதிபரானது முதல் ட்ரம்ப்புக்கும் அர்னால்டுக்கும் இடையே கருத்தியல் ரீதியாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. ட்ரம்ப்பின் குடியுரிமை திட்டத்தை அர்னால்ட் கடுமையாக விமர்சித்தார்.
ட்ரம்ப்பும் அர்னால்டின் கருத்துக்கு கிண்டலாகப் பலமுறை பதிலளித்திருக்கிறார். கடந்த ஆண்டு, புதின் - ட்ரம்ப் சந்திப்பின்போது கூட ட்ரம்ப்பை கடுமையாக அர்னால்ட் விமர்சித்தார். அதில், ''அதிபர் ட்ரம்ப், நான் இப்போது ரஷ்ய அதிபர் உடனான உங்களது பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்தேன். அந்த வீடியோ மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
நீங்கள் புதின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்கள். ஒரு சிறிய ரசிகனைப் போல நடந்துகொண்டீர்கள். நீங்கள் புதினிடம் செல்ஃபி அல்லது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கப் போகிறீர்களா” என்று விமர்சித்து அர்னால்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.