இராக்கில் ஷியா முஸ்லிம்களின் மதச் சடங்கு தொடர்பான நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி யாத்ரீகர்கள் 31 பேர் பலியாகினர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து இராக் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''இராக்கில் புனித நகரமாகக் கருதப்படும் அஷுராவில் ஷியா முஸ்லிம்களின் மதச் சடங்கு தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. இதில் யாத்ரீகர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர். 100க்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திலிருந்து தப்பித்த யாத்ரீகர் ஒருவர் கூறும்போது, “ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வேகமாகச் செல்லும்போது திடீரென ஒருவர் மீது ஒருவர் மோதி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கீழே விழ ஆரம்பித்தனர். எங்களால் அனைவரையும் மீட்க முடியவில்லை. சிலரை மட்டுமே மீட்டோம். அப்பகுதி முழுவதும் ரத்தமயமாகிவிட்டது” என்றார்.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இராக் சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார். விபத்து ஏற்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இராக் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.