உலகம்

உலக மசாலா: இசை வாழ்க்கை!

செய்திப்பிரிவு

நியூயார்க்கைச் சேர்ந்தவர் டோடன் நெக்ரின். 5 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தார். சொத்துகளை விற்றார். ஒரு ட்ரக்கையும் பியானோவையும் வாங்கினார். செல்ல நாயை அழைத்துக்கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்தார். அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா, ஐரோப்பா என ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டார்.

இதுவரை 300 நகரங்களையும் 21 நாடுகளையும் பார்த்திருக்கிறார். முக்கியமான இடங்களில் பியானோவை வாசிக்கிறார். அவரது இசையைக் கேட்டு மக்கள் கூடுகிறார்கள். அவர்களிடம் உரையாடுகிறார். 10 ஆயிரம் மனிதர்களைச் சந்தித்துவிட்டார். பியானோவுடன் பயணம் செய்வது அத்தனை எளிதான விஷயமில்லை.

இறக்குவதும் ஏற்றுவதும் கடினமானது. ஒருமுறை பியானோ கையில் விழுந்து, நெக்ரினின் இரண்டு விரல்கள் உடைந்துவிட்டன. ‘’இந்த நாடோடி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பயணம், இசை, விதவிதமான மனிதர்கள், புதுப்புது இடங்கள் என்று எல்லோருக்கும் எளிதில் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் நெக்ரின்.

ஆஹா! என்ன மாதிரியான வாழ்க்கை!

காமிக் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் வரக்கூடிய ஒரு கதாபாத்திரம் ‘Punisher’. கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களை அழிக்கக்கூடியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ நகரின் மேயர் ரோட்ரிகோ டுடெர்ட்டை Punisher என்று அழைக்கிறார்கள்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு, கிரிமினல்களை ஒழிப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகளை உலகம் மிகவும் கடுமையாக விமர்சித்தது. ஆனால் இன்று அவரை ஒரு ஹீரோவாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஒருகாலத்தில் குற்றங்களின் தலைநகராக இருந்த டாவோ, இன்று தென்கிழக்கு ஆசியாவின் மிக அமைதியான நகரமாக மாறியிருக்கிறது.

ரோட்ரிகோவின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருந்தன. கிரிமினல்கள் பலரும் திடீர் திடீரென்று மாயமானார்கள். 2005 முதல் 2008 வரை 700 மனிதர்கள் டாவோவில் மாயமாகியிருக்கிறார்கள். அநேகமாக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால் ரோட்ரிகோ, தன்னுடைய எந்தச் செயலையும் இதுவரை பகிரங்கமாக வெளியிட்டதில்லை. இரவு, பகல் என்று எந்த நேரமும் நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

மனித உரிமை ஆர்வலர்கள் ரோட்ரிகோவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் பொதுமக்கள் ரோட்ரிகோவை ஆதரிக்கிறார்கள். ’’நான் நூறு சதவீதம் தீவிரவாதிதான். ஆனால் யாருக்கு எதிராகத் தீவிரவாதம் செய்கிறேன்? ஆள் கடத்துபவர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், அரிசி கடத்துபவர்கள், கிரிமினல்களுக்கு எதிராகத்தான் போராடுகிறேன்’’ என்கிறார் ரோட்ரிகோ.

நீங்க நல்லவரா? கெட்டவரா?

இங்கிலாந்தில் உள்ள டேவென் சிறைச் சாலையில் 86 கைதிகள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று, உள்ளூர் செய்தித்தாளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ’கடந்த வியாழன் அன்று வெளிவந்த செய்தித்தாளில் இடம்பெற்ற சுடோகு மிகவும் கடினமாக இருந்தது. 86 பேரும் முயன்று பார்த்தோம். ஒருவராலும் போட இயலவில்லை.

வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே செய்தித்தாள் எங்களுக்கு அனுமதிக்கப்படுவதால், மறுநாள் வரும் விடையையும் எங்களால் பார்க்க இயலாது. அதனால் எளிதான சுடோகு வெளியிடும்படிக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கையெழுத்து இட்டிருந்தனர். செய்தித்தாள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதியவர் 33 வயது மைக்கேல் ப்ளாட்ச்ஃபோர்ட். சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் யாரையாவது கடுமையாகத் தாக்கிவிட்டு, அடிக்கடி தண்டனை அனுபவித்து வருபவர்.

எளிய சுடோகு போட்டுவிட வேண்டியதுதான்…

குளவி இனத்தைச் சேர்ந்த பூச்சி டாரண்டுலா ஹாக். ஒருமுறை கொட்டினால் மூன்று நிமிடங்களுக்கு வலி உயிர் போய்விடும். அதாவது மின்சாரத்துடன் ஒரு கம்பியை வேகமாகக் குத்தினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும் வலி. அந்த வலியை வாழ்நாள் முழுவதும் உணர முடியும்.

உலகில் அதிக வலி தரக்கூடிய விஷயங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தக் குளவி. பூச்சிகளிலேயே அதிக விஷம் கொண்டது இதுதான். ஆனால் மனித உயிர்களைப் பறிக்கும் அளவுக்குச் சக்தி கிடையாது. பூந்தேன் இவற்றின் உணவு. பெண் குளவிகளுக்கு மட்டுமே விஷக் கொடுக்குகள் இருக்கின்றன.

ஒரு சின்னக் குளவிக்கு இத்தனை சக்தியா…

SCROLL FOR NEXT