ஜெனிவா
காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் மஹ்முத் குரேஷி பேசினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் ரத்து செய்தது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயல்கிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது ஆண்டு கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி பேசியதாவது:
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. காஷ்மீர் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
அதனால் தான் மனித உரிமை ஆணையத்தின் கதவை நாங்கள் தட்டுகிறோம். காஷ்மீர் மக்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகளை பயன்படுத்தும் இந்தியாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகப்படுகின்றனர்.
எனவே காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும்’’ என குரேஷி பேசினார்.