உலகம்

இறுதிச் சடங்குக்காக ஜிம்பாப்வே கொண்டு செல்லப்பட்ட முகாபே உடல்

செய்திப்பிரிவு

மறைந்த ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் முகாபே உடல் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜிம்பாப்வே நாட்டை 37 ஆண்டுகள் ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் முகாபே உடலுக்கு சிறப்பு இரங்கல் நிகழ்வு நடந்தது. இதில் முகாபேவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஜிம்பாப்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து முகாபே உடல் ஜிம்பாப்வேவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை முகாபே குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முகாபே உடல் அவரது சொந்த கிராமமான குட்டாமாவுக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் வியாழக்கிழமை ரோஃபேரோ மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.

தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே கடந்த 1980-ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. இதையடுத்து, 1980 முதல் 1987 வரையில் ராபர்ட் முகாபே (93) பிரதமராகப் பதவி வகித்தார். பின்னர் 1987 முதல் அதிபராகப் பதவி வகித்து வந்தார். உலகிலேயே மிகவும் வயதான ஆட்சியாளராக முகாபே விளங்கினார்.

இந்நிலையில் ஜிம்பாப்வே ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதன் மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT