பிரான்ஸில் கடந்த சில மாதங்களாக நிலவும் அனல் காற்றுக்கு இதுவரை 1,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸின் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “பிரான்ஸ் நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரை பதிவாகாத அளவில் 46 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
ஜூன் 4 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையும், ஜூலை 21 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரையும் அதிகபட்சமான வெப்பநிலை நிலவியது. இது அம்மாதத்தில் நிலவும் சராசரி வெப்ப அளவைவிட 9.1 சதவீதம் அதிகம். மேலும் இந்த அனல் காற்று காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் 1,435 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் முதியவர்களே அதிகம். வெளியே வேலைக்குச் செல்பவர்களும் வெப்ப அனல் காற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
பிரான்ஸில் நிலவிய கடும் வெப்பநிலை காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு பலமுறை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸில் கடந்த 2015 ஆம் ஆண்டும், 2018 ஆம் ஆண்டும் இந்த மாதிரி கடுமையான வெப்ப அனல் காற்று விசியதாகவும் இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பிரான்ஸ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் மட்டுமல்லாது இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
பசுமை இல்லா வாயுக்கள் அதிகமாக வெளியேறி வருவதால் புவியின் வெப்பநிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாகவும் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் உலக நாடுகள் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.