பிரேசிலின் மழைக் காடுகளை அடுத்து இந்தோனேசியாவிலும் மழைக் காடுகளில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ நீடித்து வருகிறது.
இதுகுறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தரப்பில், “இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. இதன் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இதன் காரணமாக சுமார் 400 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வான்வழிப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்கும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்மை தொழில்களுக்காக காட்டுத் தீ வைக்கப்பட்டதா? என இந்தக் காட்டுத் தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தத் தீவிர பாதிப்பு மழைக் காடுகளில் ஏற்பட்டு வருவதாக சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்புக்கின்றனர். இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரமாக இறங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகின் நுரையீரல் எனக் கருதப்படும் அமேசான் மழைக் காடுகளில் கடந்த மாதம் காட்டுத் தீ ஏற்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாக அது தொடர்ந்தது. இதன் சேதம் கடந்த ஆண்டைவிட 87% சதவீதம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள மழைக் காடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.